வியட்நாம் அமைச்சர்-தினேஷ் குணவர்தன சந்திப்பு

வியட்நாம் நாட்டின் விவசாயம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் மின் ஹோன் லீ மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (21) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது நெருக்கமான இருதரப்பு உறவுகள் மற்றும் பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறிப்பாக கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

வியட்நாம் விடுதலை இயக்கத்தின்போது இலங்கை வழங்கிய ஆதரவுக்கு வியட்நாம் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

வியட்நாம் சுதந்திரம் அடைந்து ஒன்றிணைந்த பின்னர் முதலில் அங்கீகரித்த நாடுகளில் இலங்கையும் ஒன்று என்றார்.

சுதந்திரத்தின் பின்னர், வியட்நாம் விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைந்திருப்பதையிட்டு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்ப்பதற்காக வியட்நாம் கடைப்பிடித்த புதுமையான வழிமுறைகளை பாராட்டிய அவர், விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கான அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

அமைச்சர், பிரதமரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதுடன் வியட்நாம் இலங்கையை ஒரு சிறப்பு நண்பராகக் கருதுவதாகவும் டிஜிட்டல் விவசாயம் மற்றும் ஸ்மார்ட் விவசாயத்தில் நிபுணத்துவத்தை தனது நாடு பகிர்ந்துகொள்வதாகவும் கூறினார்.

பௌத்தம் மற்றும் சோசலிசத்தின் வளமான பின்னணியைக் கொண்ட இரு நாடுகளும் மக்கள் சார்ந்த அபிவிருத்திக்கு ஒரே மாதிரியான அணுகுமுறையைக் கொண்டுள்ளன என்றார். எனவே, இரு நாடுகளும் விவசாய மேம்பாட்டின் மூலம் கிராமிய அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன எனக் குறிப்பிட்டார்.