வீடொன்றில் கழுத்து வெட்டப்பட்டு பெண் கொலை ; சந்தேக நபர்கள் கைது

மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிலெஸ்ஸ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் அறையொன்றில் கடந்த 6 ஆம் திகதி பெண் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் முதலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பன்பொல மற்றும் கொஹிலே ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 48 மற்றும் 51 வயதுடைய இரண்டு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண்ணை ஏமாற்றி புதையல் என கூறி போலி தங்கங்களை கொடுத்து 1,180,000 ரூபா பணம் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளன.

இதனையடுத்து, இந்த பண மோசடிக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் மேலும் மூன்று சந்தேக நபர்கள் 350,000 ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

31,38 மற்றும் 44 வயதுடைய மூன்று நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.