வெளிநாட்டு இராஜதந்திரிகள் – வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கு இடையில் ஆகஸ்ட் முதல் வாரம் முக்கிய சந்திப்பு?

இலங்கையிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் இடையில் எதிர்வரும் ஓகஸ்ட் முதல் வாரத்தில் விசேட சந்திப்பொன்று நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தும் அதேவேளை, குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதன் மூலம் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2000 நாட்களுக்கும் மேலாகத் தொடர் கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் அரசாங்கத்தினால் நிறுவப்படுகின்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட எந்தவொரு உள்ளகப்பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், மாறாக சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக தமக்கு நீதியை வழங்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான கனேடியத்தூதுவர் எரிக் வோல்ஷுக்கும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் முக்கியஸ்த்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

அதன் நீட்சியாக எதிர்வரும் ஓகஸ்ட்மாத முதல் வாரத்தில் கொழும்பிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறக்கூடிய சாத்தியம் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.