ஹவ்லொக் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்ரி-56 ரக துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை குறித்த வழக்கில் மீண்டும் சந்தேகநபராக வெள்ளிக்கிழமை (10) கல்கிஸ்ஸை நீதிவான் நீதிமன்றத்தினால் பெயரிடப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கல்கிஸை முதலாம் இலக்க நீதிவான் நீதிமன்றத்தில், பதில் நீதிவான் ரவி மதுகம முன்னிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கையில், ஏற்கனவே இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்ட போது, போதுமான சான்றுகள் இல்லாத காரணத்தால் இந்த வழக்கின் நான்காவது சந்தேகநபரான துமிந்த திஸாநாயக்க விடுவிக்கப்பட்டிருந்தார்.
எனினும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, வழக்கின் இரண்டாவது சந்தேகநபரிடம் பெறப்பட்ட மேலதிக வாக்குமூலங்களின் மூலம், நான்காவது சந்தேகநபருக்கும் இச்சம்பவத்துக்கும் நேரடித் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
விசாரணையின் ஆரம்பத்தில் துமிந்த திஸாநாயக்க துப்பாக்கியை அகற்றுவதற்கு உதவியதாக சாட்சியங்கள் கிடைத்திருந்ததோடு, பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கியை வைத்திருப்பதற்கு இரண்டாவது சந்தேகநபருக்கு அவர் உதவியுள்ளமை வெளிப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் விடயங்களை மன்றில் முன்வைத்திருந்தனர்.
இதற்கமைய சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை பரிசீலித்த பதில் நீதிவான், துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராகப் பெயரிட்டார். துமிந்த திஸாநாயக்க சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, போதிய சான்றுகள் இன்மையால் கடந்த வருட ஜூலை 29 ஆம் திகதி தனது சேவைபெறுநர் விடுவிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டியதுடன், புதிய தீர்மானத்திற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் மன்றில் முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சமர்பனங்களையும் பரிசீலித்த பதில் நீதிவான், தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் துமிந்த திஸாநாயக்கவை விடுவிக்க உத்தரவிட்டதுடன், மேற்படி வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.




