மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போது கச்சேரிக்கு முன்பாக சட்டவிரோதமாக ஒன்று கூடி நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் 12 பேருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றில் ஆஜராகிய 4 பேரையும் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்து எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஆஜராகுமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடந்த மாச் 30 ம் திகதி இடம்பெற இருந்த மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போது அங்கு மயிலதமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை காணிகளை தனியார் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மாவட்ட செயலகத்துக்குள் எவரும் உள்நுழையவோ வெளிச் செல்லவோ விடாது வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த சம்பவம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் சட்டவிரோத ஒன்றுகூடல் மற்றும் மாவட்ட செயலக வாயிலை வழிமறித்து அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்தனர்.
இதனையடுத்து குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் பீற்றர் போல் முன்னிலையில், திங்கட்கிழமை (24) விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகிய 4 பண்ணையாளர்களையும் சரீர பிணையில் செல்லுமாறும் பொலிஸாருக்கு வாக்குமூலத்தை வழங்குமாறும் எதிர்வரும் நவம்பர் 27 ம் திகதி வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு பிணையில் விடுவித்தார்.