13வது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்துக்குள் உள்ளக முரண்

ஜனாதிபதித் தேர்தலானாலும், பாராளுமன்றத் தேர்தலானாலும் கொள்கை ரீதியாக இணங்கக் கூடிய கட்சிகளுடன் இணைந்து முற்போக்கான கூட்டணியொன்றை அமைத்து அதன் ஊடாகவே போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தவிசாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

அத்தோடு, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்துக்குள் காணப்படும் உள்ளக முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டு, ஸ்திரமான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள சு.க. தலைமையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் மாகாணசபைத் தேர்தலை இனியும் தாமதப்படுத்தாது நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பிலும் , மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பிலும் நாம் எமது நிலைப்பாட்டை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கம் முதலில் அதன் நிலைப்பாட்டை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அதேபோன்று எந்த தேர்தலானாலும் அதனை உரிய நேரத்தில் நடத்த வேண்டும் என்ற விடயங்களை நாம் சர்வகட்சி மாநாட்டில் வலியுறுத்தியிருந்தோம்.

அதற்கேற்ப அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை ஒரு முன்மொழிவாக முன்வைக்குமானால் அது தொடர்பில் கட்சி மட்டத்தில் ஆராய்ந்து நாம் பதிலளிப்போம். முதலில் இடம்பெற வேண்டியது தேர்தலா அல்லது அரசியலமைப்பு திருத்தமா என்பதையும் அரசாங்கம் குறிப்பிட வேண்டும்.

எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளக் கூடியவாறு நாம் சுதந்திர கட்சியை மீள்கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். அதற்கமைய இனிவரும் தேர்தல்களில் முற்போக்கான கூட்டணியொன்றை அமைத்து அதன் ஊடாக போட்டியிட தீர்மானித்துள்ளோம்.

எம்மால் அமைக்கப்படவுள்ள கூட்டணி தொடர்பில் கொள்கை ரீதியாக இணங்கக் கூடிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் சுதந்திர கட்சியின் சார்பில் வேட்பாளர் களமிறக்கப்படுவாரா இல்லையா என்பது குறித்து அறிவிப்போம் என்றார்.