13 குறித்து 15க்குள் அறிவிக்க வேண்டும்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் எதிர்வரும் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதியின் செயலாளர் எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை ஓகஸ்ட் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் எழுத்துமூலம் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

13ஆவது திருத்த பிரேரணையை ஜனாதிபதி ரணில், பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கவுள்ள நிலையில், ஜூலை 26ஆம் திகதி நடைபெற்ற சர்வ கட்சி மாநாட்டைக்மேற்கோள் காட்டி இந்தக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை செவ்வாய்க்கிழமை (01) சந்தித்து பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் பிற கரிசகைகளை வலியுறுத்தி 13ஆவது திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.

இந்தியாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்துக்கு முன்னர் தமிழ் கட்சி தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது குறித்துகலந்துரையாடினார்.

நல்லிணக்கம் மற்றும் அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை மேலும் மேம்படுத்துவதற்கான விரிவான முன்மொழிவை இந்தியாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைத்ததாக ஜனாதிபதி ரணில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.