200ஆவது வருடக் கொண்டாட்டங்கள் ஆரம்பம்

வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரியும் அதனது தாய் கல்வி நிறுவனமாகிய பற்றிக்கோட்டா செமினரியும் 1823 ஆம் ஆண்டு முதல் கடந்த 200 வருடங்களாக‌ வழங்கிய கல்விப் பணியையும் சமூகப் பணியும் நினைவுகூர்ந்து கொண்டாடும் வகையிலும் கல்லூரியின் எதிர்காலப் பயணம் குறித்துத் திட்டமிடும் வகையிலும்  பழைய மாணவர் வார நிகழ்வுகள் சனிக்கிழமை (15) முதல் 22ஆம் திகதி வரையான ஒருவாரகால நிகழ்வுகள் யாழ்ப்பாணக் கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளன.

இலங்கை உட்பட, உலகம் முழுவதிலும் வாழும் யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்கள் பங்கேற்கவுள்ள கொண்டாட்டங்களின் ஆரம்ப நிகழ்வு, சனிக்கிழமை (15) காலை 7 மணிக்கு கல்லூரி வாசலில் இருந்து வாகனப் பேரணியாக ஆரம்பிக்கவுள்ளது. இந்த வாகனப் பேரணி கோட்டைக்காடு, அராலி, செட்டியார்மடம், துணைவி, நவாலி, ஆனைக்கோட்டை, மானிப்பாய், சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு, சித்தங்கேணி, வட்டுகோட்டை வழியாக யாழ்ப்பாண கல்லூரியை வந்தடையும்.

ஞாயிற்றுக்கிழமை (16) நன்றிகூரல் ஆராதனை தென்னிந்தியத் திருச்சபையின் யாழ். ஆதீனத்தின் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள பேராலயத்தில் காலை ஒன்பது மணிக்கு ஒப்புக்கொடுக்கப்படும். தொடர்ந்து, கசூரினாக் கடற்கரையில் பழைய மாணவர்கள் ஒன்றுகூடி அன்றைய பொழுதைக் கழிப்பர்.

திங்கட்கிழமை(17) முதல் வெள்ளிக்கிழமை(21) வரை, பிற்பகலில் பழைய மாணவர்கள் பங்கேற்கும் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் கல்லூரியின் இரண்டு மைதானங்களிலும் நடைபெறவுள்ளன.

திங்கட்கிழமை (17) பிற்பகல் நான்கு மணியில் இருந்து யாழ்ப்பாண கல்லூரியில் தற்போது கற்கும் மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் ஒட்லி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

செவ்வாய்க்கிழமை (18) பிற்பகல் ஆறு மணிக்கு 1980களிலே கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் நடிப்பில் கல்லூரியின் தமிழ் மன்றத்தால் உருவாக்கப்பட்ட ‘கல்லூரி வசந்தத்தில்’ திரைப்படம் திரையிடப்படவுள்ளது. இத்திரைப்படத்தை அன்றைய மாணவன் நேசானந்தர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை (19) பிற்பகல் ஆறு மணி முதல் 8.30 மணி வரை பற்றிக்கோட்டா செமினரி, யாழ்ப்பாணக் கல்லூரி என்பவற்றின் வரலாறு, சிறப்பம்சங்கள், தற்காலத்தில் யாழ்ப்பாணக் கல்லூரி ஆற்றும், ஆற்ற வேண்டிய பணிகள், கல்லூரியின் எதிர்காலத்துக்கான பாதைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துப் பகிர்வுகளும் பொதுக்கூட்டமும் நடைபெறும். இந்த நிகழ்வில், கல்லூரியின் ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் அருட்கலாநிதி வே. பத்மதயாளன், கல்லூரியின் அதிபர் திருமதி ருஷிறா குலசிங்கம், கல்லூரியின் முன்னாள் அதிபர் பேராயர் கலாநிதி எஸ். ஜெபநேசன், கல்லூரியின் ஆளுநர் சபைக்கான பழைய மாணவர்களின் பிரதிநிதி ரீ. எதிராஜ், சென் ஜோன்ஸ் தொழிற்பயிற்சி நிலையத்தின் (மட்டக்களப்பு) இயக்குநர் கலாநிதி தர்சன் அம்பலவாணர், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் முன்னாள் உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபருமாகிய திருமதி ஷிராணி மில்ஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானத்துறையின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி கெங்காதரஐயர் சர்வேஸ்வரன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். நிகழ்வில் கலந்துகொள்ளுவோர் பங்குபற்றும் திறந்த உரையாடலும் பொதுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெறும்.

வியாழக்கிழமை (20) பிற்பகல் 6 மணி தொடக்கம் பழைய மாணவர்கள் பங்கேற்கும் கலாசார நிகழ்வுகள் ஒட்லி மண்டபத்தில் நடைபெறும்.

சனிக்கிழமை (22) பிற்பகல் நான்கு  மணிக்கு யாழ்ப்பாணக் கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா நடைபெறும். விழாவின் பிரதம அதிதியாக யுனிசெப் ஸ்தாபனத்தின் சிறுவர் பாதுகாப்பு நிபுணரும் இலங்கை நிர்வாக சேவையின் இளைப்பாறிய மூத்த அதிகாரியும் கல்லூரியின் பழைய மாணவருமாகிய இன்பஜோதி நித்தியராஜ் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.

மேற்குறித்த ஒருவார கால நிகழ்வுகள் தொர்பான மேலதிக விவரங்களுக்கு நிஷாந்தினி – 0770834132, செந்தூரன் – 0779599364, சதீஸ் – 0779587712 ஆகியோரைத் ​தொடர்புகொள்ள முடியும்.