2019ல் இரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய தொண்டு நிறுவனப் பதிவுகளை மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

2019 ஆம் ஆண்டு ரத்துச் செய்யப்பட்டுள்ள  இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களின் பதிவுகளை மீண்டும் செயற்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம்  மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நிலையியற் கட்டளை 27  2இன் கீழ் கேள்வி எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புத்தசாசன மத மற்றும் கலாசார  அமைச்சின் கீழ் இயங்கி வரும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 350 இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் பல தசாப்தங்களாக பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வமாக இயங்கி வந்தன.

இந்நிறுவனங்கள், நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு சமய ஒழுங்குகளை பாதுகாத்தல்,கலாசார விழுமியங்களை நிலைநிறுத்தல், இளைஞர் மற்றும் பெண்கள் முன்னேற்றம், கல்வி விளையாட்டு மற்றும் சமூக சேவைகள், சமூகப் பிரச்சினைகளுக்கான சமரச மற்றும் வழிகாட்டல் நடவடிக்கைகள் போன்ற பல துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கி வந்தன. குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும். சமூக நல்லிணக்கத்தினை பேணவும் இந்நிறுவனங்கள் முன்னனியில் செயல்பட்டன என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு,அப்போது இருந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சினுடைய செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய. பதிவு செய்யப்பட்டிருந்த இந்நிறுவனங்களின் பதிவுகள் உடனடியாக இரத்து செய்யப்பட்டன. இவ்வாறு. எந்தவிதத் தனிப்பட்ட விசாரணை அறிக்கைகளும் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், நாடு முழுவதும் செயல்பட்டு வந்த சுமார் 350 இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களின் பதிவுகள் மொத்தமாக இரத்து செய்யப்பட்டிருப்பது, குறித்த நிறுவனங்களை பல்வேறு நிர்வாக மற்றும் சட்ட சிக்கல்களுக்கு உள்ளாக்கியதுடன் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் கவலைகளையும் எழுப்பியுள்ளது.

இந்த தீர்மானத்தின் காரணமாக, பல சமூக சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. கல்வி மற்றும் கலாசார திட்டங்கள் பாதிக்கப்பட்டன. இளைஞர் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் தடைப்பட்டன, சமூக நல்லிணக்க நடவடிக்கைகள் குறைந்துள்ளன. இவ்வாறான பல காரணங்களால் இந்த நாடும் நாட்டின் குடிமக்களும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு உதவிகளை பெற்றுக் கொள்வதிலும் நிலையான அபிவிருத்திகளை அடைவதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.

ஒரு சில நிறுவனங்கள் தொடர்பாக சந்தேகங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் இருந்தால், அவற்றை தனித்தனியாக விசாரித்து உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஆனால், எந்தவிதமான தனிப்பட்ட காரணங்களும் இல்லாமல், நாடு முழுவதும் உள்ள அனைத்து இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களின் பதிவுகளையும் ஒரே நேரத்தில் ரத்துச் செய்திருப்பதை ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாக கருதுவதுடன் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகவும் துரோகமுமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த நிலைமையில், நாட்டின் ஒட்டுமொத்த நலனையும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு முன்பு சிறப்பாக இயங்கி வந்த இந்நிறுவனங்களின் பதிவுகளை உடனடியாக மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும். அவர்கள் தங்களது பணிகளை சட்டபூர்வமாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றும் வகையில் வழிகாட்ட தங்களது அமைச்சு மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஆவண செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.