2020 முதல் 2025 வரை 3,791 விசேட வைத்திய நிபுணர்கள் வெளிநாடு சென்றனர் – பிரதி அமைச்சர் மதுர செனவி

2020ஆம் ஆண்டில் இருந்து 2025 ஆம் ஆண்டுவரை மொத்தமாக 3,791 விசேட வைத்திய நிபுணர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளர். அவர்களில் அதிகமானவர்கள் விசேட வைத்திய பயிற்சியை பெற்றுக்கொள்ளவே சென்றுள்ளனர் என பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான நேரத்தில் தயாசிறி ஜயசேகர எம்.பியினால் வினவப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பதிலளிக்கையில்,

2020ஆம் ஆண்டில் இருந்து 2025 ஆம் ஆண்டுவரை மொத்தமாக 3,791 விசேட வைத்திய நிபுணர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளர். அவர்களில் அதிகமானவர்கள் விசேட வைத்திய பயிற்சியை பெற்றுக்கொள்ளவே சென்றுள்ளனர். சிறிய எண்ணிக்கையிலானவர்களே தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்கும் வேலைவாய்ப்புக்களுக்கும் சென்றுள்ளனர். அதேபோன்று வைத்திய சிகிச்சைகளுக்காகவும் சிவலர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

அத்துடன் தற்போதும் வெளிநாடுகளுக்கு செல்ல வைத்தியர்கள் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக நிறுவன சட்டக்கோவை மற்றும் சுற்று நிருபத்துக்கு அமைய 280 வைத்தியர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர். அதேநேரம் வைத்தியர்கள் நாட்டைவிட்டு செல்வதை குறைப்பதற்கு அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக அவர்களுக்கான சிறந்த சூழல், போக்குவரத்து வசதிகள், கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற விடயங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

குறிப்பாக விசேட வைத்திய நிபுணர்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கான பொருத்தமான இடமில்லை. சில வேளைகளில் அவர்கள் தங்களின் வாகனங்களில் இரவை கழித்து வருகிறார்கள். அதனால் அதுதொடர்பாகவும் நாங்கள் தற்போது கலனம் செலுத்தி, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

அதேநேரம் எமது நாட்டில் ஆரம்ப சேவை வைத்தியர் ஒருவருக்கு 2026 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து 84574 ரூபா சம்பளமாக பெற்றுக்கொள்கிறார்கள். இதற்கு கொடுப்பனவு சேர்க்கப்படுகிறது. 2027 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து 94,150 ரூபா பெற்றுக்கொள்கிறார்கள். கொடுப்பனவு சேர்க்கப்படுகிறது.

அத்துடன் விசேட வைத்தியர் ஒருவருக்கு 2026 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து ஆரம்ப சம்பளம் ஒரு லட்சத்தி 36 ஆயிரத்தி 575 ரூபா, இதற்கு கொடுப்பனவு சேர்க்கப்படுகிறது. 2027 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து ஒருலட்சித்தி 56ஆயிரம் ரூபா, கொடுப்பனவு சேர்க்கப்படுகிறது.

அத்துடன் 2020 முதல் 2026 6ஆம் மாதம் வரை 1,429 பொது வைத்தியர்கள் சம்பளத்துடன் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அதேநேரம் சம்பளம் இல்லாமல் விசேட வைத்திய நிபுணர்கள் 140 பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர் என்றார்.