33 ஆயிரம் சம்பள உயர்வு கோரி போராட்டம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இன்று (19) காலை ஆரம்பிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

விமான நிலையங்களுக்கிடையிலான நிறுவன ஊழியர் சங்கம், இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம், முற்போக்கு ஊழியர் சங்கம், தேசிய ஊழியர் சங்கம் மற்றும் ஐக்கிய ஊழியர் சங்கம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி  சுமார் 3,000 உறுப்பினர்கள் இந்த எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக் கொண்டிருந்தனர்.

இறுதியாக கடந்த 2018 இல் தமக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அனைத்து சம்பள நிலைகளிலும் உள்ள விமான நிலைய ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 33,000 ரூபா சம்பள உயர்வை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த ஊழியர்களின் போராட்டம் காரணமாக விமானங்கள் அல்லது விமான நிலையத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு எந்தவித தடங்கலும் அல்லது பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.