தனது வீட்டு முற்றத்தில் யானையினால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மரண விசாரணையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத்புரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று புதன்கிழமை (8) அதிகாலை இந்த யானைத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் இன்று பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறையில் மஜீத்புரம் மல்வத்தை பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே (வயது 48) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், யானை தாக்கி உயிரிழந்த பெண் 4 வருடங்களுக்கு முன்னர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒரு காலில் முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் அப்பெண்ணின் வீட்டின் அருகில் உள்ள பகுதியானது யானைகள் தொகையாக வழி மாறிச் செல்லும் இடமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் யானைத் தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது அங்கு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




