மிஹிந்தலை விகாரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 41 இலட்சம் ரூபா மின்சாரப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் மிஹிந்தலைக்கு வருகின்றனர். இங்கு வந்து மலசலக்கூடத்துக்கு செல்ல வேண்டாம். நீரில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இரவில் வரவேண்டாம். நாட்டின் ஆட்சியாளர்கள் மகாநாயக்க தேரர்களிடம் சென்று புத்தசாசனத்தை நிலைநிறுத்துவதாக கூறுவது பாரிய பொய்யாகும் என மிஹிந்தலை மகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வலவாஹெங்குனுவெவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
மிஹிந்தலை விகாரையில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் புதன்கிழமை (02) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அன்றைய காலத்தில் நமது அரசர்கள் இந்த விகாரையை பாதுகாக்க தமது உயிர்களையும் தியாகம் செய்துள்ளனர். இந்த விகாரை பாதுகாக்கப்பட வேண்டுமென இங்குள்ள கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கை வரலாற்றில் சுதந்திரத்துக்கு பின்னர் 79 ஆம் ஆண்டு மிஹிந்தலை விகாரைக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.
இன்றும் இலட்சக்கான மக்கள் வழிபடுவதற்காக இரவு, பகல் என வருகை தருகின்றனர். கடந்த பூரணை தினத்தில் உலக மக்கள் காட்டிய அக்கறையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இருப்பினும் இன்று மிகிந்தலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 41 இலட்சம் ரூபா மின்சாரப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் மிஹிந்தலை வருகின்றனர். இங்கு வந்து மலசலக்கூடத்துக்கு செல்ல வேண்டாம். நீரில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இரவில் வரவேண்டாம். இங்கு பாம்புகள், விஷ பாம்புகள் உள்ளன. நகரத்துக்கு அடியில் இருந்து நுனி வரையில் வெளிச்சம் கிடைக்கும். அதனை அவர்களால் பார்க்க முடியாது.
அரசாங்கம் ஒவ்வொரு துறைகளையும் தனியாருக்கு விற்பனை செய்கிறது. நாட்டின் ஆட்சியாளர்கள் மகாநாயக்க தேரர்களிடம் சென்று புத்தசாசனத்தை நிலைநிறுத்துவதற்கு பாடுபடுகிறோம் என்கிறார்கள். அது பாரிய பொய்யாகும் என்றார்.