மேல் நீதிமன்றங்களால் ஒன்பது பேருக்கு மரண தண்டனை, வாழ்நாள் சிறைத்தண்டனை மற்றும் 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தால் கடந்த பல வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான மூன்று சுற்றிவளைப்புகளின் போது, பெரும் தொகையில் போதைப்பொருள்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள்களை இறக்குமதிச் செய்தல், தம்வசம் வைத்திருத்தல் மற்றும் விற்பனைச் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளே இந்த ஒன்பது பேருக்கு எதிராகவும் சுமத்தப்பட்டிருந்தன.
2020.04.10 அன்று 45 கிலோ 654 கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஈரான் பிரஜைகள் இருவர் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் ஐவருக்கு எதிரான வழக்கில், அவர்கள் அனைவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 2023.06.26 ஆம் திகதியன்று 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2016.12.13 அன்று 38 கிராம் 750 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருடன் கைது செய்யப்பட்டவருக்கு ஹோமாகம மேல் நீதிமன்றத்தால், 2023.06.28 அன்று வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
2016.05.27 அன்று ஒரு கிலோ 744 கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நைஜீரிய பிரஜைக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 2023.07.06 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.