உலகளாவிய போர்ப் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருள் விலை அதிகரிப்பு ஆகியவையே நாட்டில் பொருட்களின் விலையேற்றத்திற்கும் பணவீக்கத்திற்கும் பிரதான காரணமாக அமைந்துள்ளதாக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவு, வரவு செலவுத் திட்டம் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது பணவீக்கம் சுமார் 10.8 சதவீதமாகக் காணப்படுவதையும், அதனால் பொதுமக்கள் நாளாந்தம் சிரமங்களை எதிர்கொள்வதையும் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அமைச்சர், உலகளவில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக அனைத்து நாடுகளிலுமே பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.

போர்ச் சூழல் தணிந்து சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் குறையும் பட்சத்தில், பணவீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வருவதுடன், எரிபொருள் விலையின் நேரடித் தாக்கத்தினால் பொருட்களின் விலைகளும் மீண்டும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை எதிர்க்கட்சித் தலைவர் “கிளிப்பிள்ளை போல் வாசித்தார்” என விமர்சித்தமைக்குப் பதிலளித்த அமைச்சர், பாராளுமன்றத்தில் ஒரே விடயத்தைத் திரும்பத் திரும்பப் பேசுவது யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும், பாராளுமன்றத்தில் அவர்களின் ஆசனங்கள் பெரும்பாலான நேரங்களில் வெறிச்சோடியே காணப்படுகிறது. எதிர்க்கட்சியினரின் வேலைத்திட்டங்களை மக்கள் ஒருபோதும் நம்பவில்லை.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அறிவியல் துறைக்காகக் கடந்த ஆண்டை விட 600 பில்லியன் ரூபாய் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டின் அபிவிருத்திப் பணிகள் போர்ச் சூழல் காரணமாகத் தார் பெறுவதில் ஏற்பட்ட பற்றாக்குறையினால் வீதிப் புனரமைப்புப் பணிகள் சில தாமதமடைந்ததாகவும், ஒப்பந்தக்காரர்களுக்கு ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்கும் வகையில் சில வீதிகள் கொன்கிரீட் வீதிகளாக மாற்றப்பட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்குள் 100 சதவீத இலக்கை நெருங்கி இப்பணிகளை நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு வத்தளையிலிருந்து நீர்கொழும்பு வரை பிரம்மாண்டமான "நத்தார் வலயம்" அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்த நத்தார் வலயத்தைக் கண்டுகளிக்கவும், பண்டிகைக் காலத்தைச் சிறப்பாகக் கொண்டாடவும் நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் அழைப்பு விடுத்த அவர், பண்டிகைக் காலத்தில் மக்களுக்குச் சில பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.