அநுராதபுர அட்டமஸ்தானப் பிரதேசத்தைச் சுற்றி வேலி அமைக்கும் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளதுடன், இசுருமுனிய மற்றும் வெஸ்ஸகிரிய பகுதிகளிலும் வேலி அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை. அத்துடன், அநுராதபுர புனிதப் பிரதேசத்துக்குள் வாழும் மக்களை வெளியேற்றும் நோக்கமோ அல்லது திட்டமோ கிடையாது. அபிவிருத்தித் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த சில விடயங்கள் தொடர்பில் ஆரம்பத்திலேயே மக்களுக்கு உரிய தெளிவுபடுத்தல்களை வழங்கத் தவறியமையினால் தவறான புரிதல்கள் ஏற்பட்டுள்ளதாக பதில் அட்டமஸ்தானாதிபதி ஈதல்வெடுனுவெவே ஞானதிலக்க தேரர் விசனம் வெளியிட்டார்.
அநுராதபுர புனிதப் பிரதேசத்தில் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது அவசியமான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆலோசனைக் குழுவின் கூட்டம் இன்று திங்கட்கிழமை (16) முற்பகல் புத்தசாசன அமைச்சில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு ஒரு விடயத்தைச் சமூகத்துக்குத் தெளிவுபடுத்த முடியாமல் போனமை குறித்து உண்மையிலேயே கவலையடைகின்றேன். இந்தத் திட்டத்தில் காணப்பட்ட சில விடயங்கள் தொடர்பில் ஆரம்பத்திலேயே மக்களுக்கு அறிவூட்டியிருக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாமல் போனமை எமது தவறாகும்.
உதாரணமாக, வேலி அமைப்பது தொடர்பில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த வேலி சுமார் ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தது. அதன் எஞ்சிய பகுதிகளைப் பாதுகாத்து மீளமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மறைந்த தலைமைத் தேரர் ஒருவர் முன்வைத்திருந்தார்.
இந்த வேலி அமைக்கப்படுவதற்கான நோக்கம் வேறொன்றுமல்ல. கால்நடைகள் உள்ளே நுழைவதாலும், மலர் தானம் மற்றும் இளநீர் தானம் வழங்குவதற்காக வருகைதருவோராலும் தொல்லியல் நினைவுச் சின்னங்களுக்குச் சேதம் ஏற்படுகின்றது. அதேபோன்று, அனுமதியற்ற கட்டுமானங்களும் இடம்பெறுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்காகவே வேலி அமைக்குமாறு கோரப்பட்டிருந்தது.
அந்த வேலி அட்டமஸ்தானப் பிரதேசம் முழுவதையும் சுற்றிவளைக்கும் வகையில் அமைக்கப்படவில்லை. குறிப்பிட்ட தொலைவான பகுதியில் மாத்திரமே அமைக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், தற்போது வேலி அமைப்பது தொடர்பில் எமக்கு எந்தவொரு நிலைப்பாடும் இல்லை. அந்தத் திட்டம் கைவிடப்பட்டுவிட்டது.
அதேபோன்று, இசுருமுனிய மற்றும் வெஸ்ஸகிரிய பகுதிகளிலும் வேலி அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆனால், அந்தப் பகுதிகளிலும் வேலி அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை. புனிதப் பிரதேசத்துக்குள் வாழும் மக்களை வெளியேற்றப் போவதாகப் பலர் கருத்துகளைப் பரப்பியுள்ளனர். ஆனால், அவ்வாறான எண்ணமோ அல்லது திட்டமோ எம்மிடம் கிடையாது.
புனிதப் பிரதேசம் 28 சதுர கிலோமீற்றர் 38 பரப்பளவாக அதிகரிப்பது ஏன் என்பது தொடர்பில் மக்களுக்கு மிகப்பெரிய கேள்வி ஏற்பட்டுள்ளது. உண்மையில், ஒரு இலட்சம் மக்கள் வருகைதரும் சந்தர்ப்பத்தில் சுமார் 25 ஆயிரம் கார்கள் வருகைதர வேண்டியிருக்கும். அதேபோன்று, ஒரு இலட்சம் மக்களின் வருகையுடன் பெருமளவிலான வாகனங்களும் சுமார் 5,000 பேருந்துகளும் வருகைதரக்கூடிய நிலை ஏற்படும். அவ்வாறு வருகைதரும் மக்களையும் வாகனங்களையும் முகாமைத்துவம் செய்வது மிகவும் கடினமானதாகும்.
இதற்கு உதாரணமாக, பொசன் பண்டிகையின்போது சுமார் 13 இலட்சம் பேர் அநுராதபுரத்துக்கு வருகைதந்துள்ளனர். இவ்வாறான பெருந்திரளான மக்கள் வருகைதரும் சந்தர்ப்பங்களில் அவர்களைக் கையாள்வதும், தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் பெரும் சிரமமாக அமைகின்றது.
எனவே, இந்த விடயம் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சங்களைக் கொண்டிருக்க வேண்டாம். எமது உடல், எலும்பு, மஜ்ஜை மற்றும் நரம்புகளுடன் இந்தப் புனிதப் பிரதேசத்தின் வாழ்வியலோடு ஒன்றிணைந்திருக்கும் மக்களே இதனைப் பாதுகாத்து வருகின்றனர். 104 மன்னர்கள் இந்த நகரத்தைப் பாதுகாத்து வந்துள்ளனர். எதிர்காலத்திலும் இந்த நகரம் அவ்வாறே பாதுகாக்கப்படும். எனவே, இந்தப் புனிதப் பிரதேசம் தொடர்பில் எவரும் ஒருபோதும் தவறான நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டாம்.
இந்தப் புனித பூமியில் காணப்படும் ஒவ்வொரு மணல் துகளும், கல்லும், மண்ணும் புத்தர், பச்சேக புத்தர்கள் மற்றும் மகா அரஹந்தர்கள் ஆகியோரின் பாதம் பட்ட புனித இடங்களாகும். இந்தப் புனித பூமியைப் பாதுகாப்பதற்காக பௌத்தர்கள் மாத்திரமன்றி, ஏனைய சமூகத்தினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
எனவே, இந்தப் புனிதப் பிரதேசத்தைப் பாதுகாத்து எதிர்காலத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும். இவற்றை நிராகரிக்கவோ, உடைத்துச் சிதைக்கவோ அல்லது சேதப்படுத்தவோ வேண்டாம். மாறாக, இவற்றைப் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதுடன், உங்களது கருத்துகளையும் முன்வைக்க வேண்டும் என்றார்.