முல்லைத்தீவு - செம்மலை, பெரியகுளத்தினைச் சீரமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தநிலையில், ஒருகோடியே 62இலட்சம்ரூபாய் பெறுமதியில் குறித்த குளத்தினைச் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த செம்மலை, பெரியகுளத்தின் சீரமைப்புப் பணிகளை நேற்று சனிக்கிழமை (10) நேரில் சென்று பார்வையிட்டதுடன், ஒப்பந்ததாரருடனும் கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமது கோரிக்கையை ஏற்று குறித்த குளத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளருக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு - செம்மலைப்பகுதியில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆ ம் திகதி மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நாடாத்தியிருந்தார்.

குறித்த மக்கள் குறைகேள் சந்திப்பில் முல்லைத்தீவு - செம்மலை கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள பெரியகுளத்தின் அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளதாக அப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், நிலமைகளும் நேரடியாகக் காண்பிக்கப்பட்டது.

அந்தவகையில், சுமார் 75 ஏக்கர் வயல்நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யக்கூடிய குறித்த பெரியகுளத்தின் அணைக்கட்டு மூன்று இடங்களில் உடைப்பெடுத்திருந்தது.

இதனால் கடல்நீர் குளத்தினுள் உட்புகுவதால் வயல் நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயநிலை காணப்படுவதாகவும், கிராமத்தின் குடிநீரிலும் பாரிய தாக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடு செய்யப்பட்டது.

அத்தோடு, குறித்த குளத்தின் அணைக்கட்டை செம்மலை மற்றும் செம்மலை கிழக்கு கிராம மக்கள் மயானத்திற்கு செல்வதற்கான பாதையாகவும் பயன்படுத்திவந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது குறித்த அணைக்கட்டு உடைப்பெடுத்துள்ளதால் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்துச்செல்வதில்  செம்மலை மற்றும் செம்மலைகிழக்கு கிராமமக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றமை தொடர்பிலும் இதன்போது அப்பகுதி மக்களால் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அதேவேளை, இந்த குளத்தின் அணைக்கட்டினைச் சீரமைத்துத் தருமாறு உரியவர்களுக்கு கமக்கார அமைப்புக்களினூடாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும், குறித்த குளக்கட்டினை சீரமைப்பதுதொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லையெனவும் இதன்போது அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடுசெய்தனர்.

இந்நிலையில், குறித்த பெரியகுளத்தின் சீரமைப்புத்தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்ட கமநல உதவி ஆணையாளரை நேரில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.

அதேவேவளை, குறித்தபகுதிக்கு நேரடியாக வருகைதந்து நிலமைகளைப் பார்வையிடவேண்டுமென கமநல உதவி ஆணையாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வலியுறுத்தியிருந்தார்.

அதற்கமைய, கடந்த  பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி  பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் கமநல உதவி ஆணையாளர் ஆகியோர் உடைப்பெடுத்திருந்த பெரியகுளத்தினை நேரடியாகப் பார்வையிட்டதுடன், குறித்த குளத்தினைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கமநல உதவி ஆணையாளர் தெரவித்திருந்தார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து குறித்த பெரியகுளத்தினைச் சீரமைப்பதற்கு 01 கோடியே 62 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, சீரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள குளச் சீரமைப்பு வேலைகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நேற்றைய தினம்  நேரில் சென்று பார்வையிட்டதுடன், தமது தொடர்ச்சியான கோரிக்கையினை ஏற்று குறித்த பெரிய குளத்தினை சீரமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட கமநல உதவி ஆணையாளருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.