நேபாளத்தின் கோர்க்கா மாவட்டத்தில் புந்திகண்டகி ஆற்றில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு நிலைமையைத் தொடர்ந்து, அங்குள்ள இலங்கைப் பிரஜைகளுடன் காத்மாண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகம் தொடர்ச்சியாகத் தொடர்புகளைப் பேணி வருவதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய நேபாளத்தின் கோர்க்கா மாவட்டத்தில் நிலவும் இச்சூழ்நிலையில், இதுவரை எந்தவொரு இலங்கைப் பிரஜையும் பாதிக்கப்படவில்லை எனத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு உள்ளூர் நிலவரங்கள் மற்றும் அவசரகாலத் தகவல்கள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

வெள்ளப்பெருக்கு அபாயம் நிலவும் மத்திய நேபாளப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் இலங்கைப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேபாளத்தின் அவசரகால நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் இலங்கைத் தூதரகம், அங்குள்ள இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.