கடுவலையில் அமைந்துள்ள மின்சாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் இன்று (19) வியாழக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில், அந்தக் கட்டடத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாய், தந்தை 2 வயது மற்றும் 6 வயதுடைய இரண்டு பிள்ளைகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட இரண்டு மாடிக் கட்டடத்தின் கீழ் தளத்தில் மின்சாதன உபகரண விற்பனை நிலையம் அமைந்துள்ளதுடன், உயிரிழந்த குடும்ப உறுப்பினர்கள் மேல் தளத்தில் தங்கியிருந்துள்ளனர்.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், தீயைக் கட்டுப்படுத்துவதற்காகக் கோட்டை தீயணைப்புப் பிரிவின் தீயணைப்பு வாகனங்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.