துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பின்னர் பொலிஸ் தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினருமான ரஞ்சித் குமார் என்ற 'கொண்டே ரஞ்சி' என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் அடிப்படையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்று மேற்கு மாகாண வட குற்றப்பிரிவு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை (03) இரவில் சந்தேகநபரைச் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று பொலிஸார் நடத்திய சோதனையின் போது,கனேமுல்ல - பொல்லத்த பகுதியிலுள்ள மயானத்தில்  மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவன் ஒருவனின் ஆலோசனையின் பேரில், நபர் ஒருவரைப் படுகொலை செய்யும் நோக்கிலேயே இந்தத் துப்பாக்கி மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட 'கொண்டே ரஞ்சி' வழங்கிய மேலதிக வாக்குமூலங்களின் அடிப்படையில், இந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த கொலை முயற்சி குறித்தும் மேற்கு மாகாண வட குற்றப்பிரிவினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.