மக்கள் போராட்ட இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்டனப் பேரணியின்போது நேற்று (03) சனிக்கிழமை கைது செய்யப்பட்ட 6 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (04) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் வேகமாக அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக இந்தக் கண்டனப் பேரணி நேற்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொரளை கெம்பல் மைதானத்திற்கு அருகில் ஆரம்பமான எதிர்ப்புப் பேரணி, புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே குறித்த 06 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் மக்களை ஒன்றுகூட்டியமை மற்றும் உரிய அனுமதிப்பத்திரத்தைப் பெறாமல் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.