வில்பத்து தேசிய வனப்பூங்காவிற்கு அருகிலுள்ள முனசிங்ககம பகுதியில், கம்பிச் பொறியில் சிக்கியிருந்த பெண் கரடியொன்று வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளால் பத்திரமாக மீட்கப்பட்டு, மீண்டும் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது.

பண்டுலகம வனவிலங்கு கால்நடை வைத்தியர் தலைமையிலான வனவிலங்கு அதிகாரிகள் குழுவினரே இந்த மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

பொறியில் சிக்கியிருந்த கரடியின் கம்பியை வெட்டி அகற்றிய அதிகாரிகள், அதற்குத் தேவையான முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்கிய பின்னர், வில்பத்து தேசிய வனப்பூங்காவிற்குப் பாதுகாப்பாகக் கொண்டு சென்று விடுவித்துள்ளனர்.

இந்த மீட்புப் பணியில் வில்பத்து தேசிய வனப்பூங்காவின் வனவிலங்கு உத்தியோகத்தர்கள், சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் மின்சார வேலி பராமரிப்பு உதவியாளர்களும் இணைந்து கொண்டதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.