கல்லடியில் துப்புரவு, விழிப்புணர்வுப் பணிகள் தீவிரம்!
vidiyel 25 ஆனி 2026 · 14:46 7 views
Ad Space
Ad Space
தேசிய ரீதியில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ள 15 மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, மாவட்டத்தில் அவசர கூட்டுத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு கட்டமாக, இன்று வியாழக்கிழமை (25) காலை மட்டக்களப்பில் உள்ள மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்லடி வேலூர் பகுதியில் விசேட துப்புரவு மற்றும் விழிப்புணர்வுப் பணிகள் நடத்தப்பட்டன.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பிராந்திய சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளீஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என். தனஞ்சயன் ஆகியோர் கலந்துகொண்டு கள ஆய்வுகளையும் விழிப்புணர்வுப் பணிகளையும் வழிநடத்தினர்.
தற்போது மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி (MOH) வைத்தியர் எஸ். உதயகுமார் எச்சரித்துள்ளார்.
இதேவேளை மாவட்டத்தில் இனங்காணப்படும் டெங்கு நோயாளர்களில் 50%க்கும் அதிகமானோர் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலேயே வசித்து வருகின்றனர். கடந்த மே மாதத்தில் மட்டக்களப்பு MOH பிரிவில் 59 நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், ஜூன் மாதத்தில் இந்நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.
தற்போது தினசரி 3 முதல் 4 வரை புதிய டெங்கு நோயாளர்கள் கண்டறியப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.