முல்லைத்தீவு - முள்ளியவளை கமநலசேவை நிலையப்பிரிவிலுள்ள, மதவளசிங்கன் குளத்தின் கீழான களமோட்டை வயல்நிலங்களுக்குச் செல்வதற்கான பாலத்தின் நிர்மாணப்பணியும் அதனோடு இணைந்த 800மீற்றர் தூரமான வீதியின் சீரமைப்புப் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது தொடர் கோரிக்கையினையடுத்து 4.5மில்லியன்ரூபாயில் குறித்த களமோட்டை பாலத்தின் நிர்மாணப்பணிகளும், அதனோடு இணைந்த வீதியின் சீரமைப்புப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 12.10.2026 அன்று பாலத்தின் நிர்மாணப்பணிகளையும், வீதியின் சீரமைப்பு பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் மற்றும் முள்ளியவளை கமநலசேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு - முள்ளியவளை கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள மதவளசிங்கன்குளத்தின் கீழுள்ள களமோட்டை பகுதி வயல்நிலங்களுக்கு ஆற்றைக்கடந்து செல்வதற்கான பாலம் இன்மையால் நெற்பயிற்செய்கைக் காலத்தில் நிலப்பண்படுத்தலுக்கு உழவியந்திரத்தை கொண்டுசெல்லுதல், விவசாய உள்ளீடுகளை எடுத்துச்செல்லுதல், விவசாய நிலங்களுக்கான காவலுக்குச் செல்லுதல், அறுவடைக்காலத்தில் அறுவடை இயந்திரத்தைக் கொண்டுசெல்வது, அறுவடையை எடுத்துச்செல்வது உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் விவசாயிகள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
அதேவேளை 35அடி தூரமான ஆற்றைக்கடப்பதற்குப்பதிலாக 15கிலோமீற்றர் சுற்றியே தமது விவசாய நிலங்களுக்கு செல்லவேண்டிய அவலநிலையை களமோட்டைப் பகுதியில் நெற்செய்கை மேற்கொண்டுவரும் விவசாயிகள் எதிர்நோக்கியியிருந்தனர்.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைக்கமைய கடந்த 30.07.2025அன்று நிலமைகளை நேரில்சென்று பார்வையிட்ட வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் களமோட்டை வயல்வெளிக்குச் செல்வதற்கான ஆற்றுப்பாலத்தை அமைப்பதுதொடர்பில் தம்மால் கவனம்செலுத்தப்படுமெனத் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய குறித்த களமோட்டை பாலத்தை அமைப்பது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் தொடர்ச்சியாக வலியுறுத்தியதுடன், நீர்ப்பாசனப் பொறியியலாளரிடமும் இதுகுறித்து தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்.
இத்தகைய சூழலில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து, 4.5மில்லியன் பெறுமதியில் குறித்த பாலத்தையும் அதனோடு இணைந்த 800மீற்றர் தூரமான வீதியையும் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் திங்கட்கிழமை (12.10.2026) குறித்த பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் களமோட்டைப் பாலத்தின கட்டுமானப் பணிகள் மற்றும் அதனோடு இணைந்த வீதியின் சீரமைப்புவேலைகளைப் பார்வையிட்டார்.
இதன்போது மதவளசிங்கன்குளம் கமக்கார அமைப்பு பிரதிநிதிகளால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.