மறைந்த பிரபல அரசியல் ஆய்வாளரும், மூத்த சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கத்தின் இறுதிக் கிரியைகளும் இறுதி யாத்திரை நிகழ்வும் நேற்றுத் திங்கட்கிழமை (12.10.2026) வீரமனை, யாழ்.குப்பிழான் தெற்கில் அமைந்துள்ள அவரது சகோதரி இல்லத்தில் இடம்பெற்றது.



நேற்றுக் காலை- 08 மணியளவில் இறுதிக் கிரியைகள் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து இறுதி அஞ்சலிக் கூட்டம் ஆரம்பமானது. ஆசிரியர் தில்லையம்பலம் சசிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர் இராஜேஸ்வரன் சஞ்சீபன் தொடக்க அஞ்சலி உரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து அரசியல், சமூக, பொருளாதார ஆய்வாளர் தெ.மதுசூதனன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஈழத்தின் முன்னணி நாடக மற்றும் அரங்கவியலாளருமான கலாநிதி.க. சிதம்பரநாதன், சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை. சக்திவேல், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், போராளிகள் நலன்புரிச் சங்கத் தலைவர் ஈஸ்வரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர்.கே.ரி.கணேசலிங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சைவசித்தாந்தத் துறைத் தலைவர் கலாநிதி.திருச்செல்வம் செல்வமனோகரன், பிரபல அரசியல் ஆய்வாளர் எம்.நிலாந்தன், மூத்த கல்வியியலாளரும், எழுத்தாளருமான நடராஜா அனந்தராஜ், மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன், மூத்த சிவில் செயற்பாட்டாளர் இ.சுந்தரேஸ்வரன், மலையக சமூக ஆய்வு மையத்தின் சார்பில் ஆசிரியர். வேலு இந்திரஜித்தன்,தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன், இளம் மருத்துவர் கற்கண்டு உதயசீலன், இளம் சட்டத்தரணி சுபாகர், வடக்கு மாகாணக் காணி உரிமைக்கான மக்கள் இயக்கத் தலைவரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்டத் தலைவருமான இரத்தினசிங்கம் முரளிதரன், கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் என்.இன்பம், அரசியல், சமூகச் செயற்பாட்டாளர் நக்கீரன் ஜெகநாதன், ஓய்வுநிலை அதிபர் தில்லை ரவீந்திரநாதன், யோதிலிங்கத்தின் நெருங்கிய நண்பன் சக்திதரன், ஊடகவியலாளர் செ.ரவிசாந் ஆகியோர் கலந்து கொண்டு நினைவுரைகள் ஆற்றினர்.




அதனைத் தொடர்ந்து அவரது புகழுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நண்பகல்-12 மணியளவில் குப்பிழான் காட கடம்பை இந்துமயானத்தில் திருமுறை, திருப்புகழ் ஓதுதலுடன் யோதிலிங்கத்தின் மூத்த புத்திரி கொள்ளி வைக்கப் புகழுடல் அக்கினியுடன் சங்கமமானது. இறுதி அஞ்சலி, இறுதி யாத்திரை நிகழ்வில் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.