வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (அக்.26) புயலாக வலுப்பெறும். இதன் காரணமாக தமிழகத்தில் சிவகங்கை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 13 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தெற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (அக்.26) காலை மேலும் வலுப்பெற்று மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும், நாளை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று மிக தீவிர புயலாக ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளை அடையகூடும். ஆந்திரப்பிரதேசம் மற்றும் யேனம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே மிக தீவிர புயலாக கரையை கடக்கக்கூடும்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியிலிருந்து வட தமிழக கடலோர பகுதிகள் வரை கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் நாளை புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்.27-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் இதர தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. .
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ.வேகத்திலும் வீசக்கூடும். 27, 28 தேதிகளில் வட தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் 20 செமீ, நெடுங்குணத்தில் 18 செமீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் தலா 17 செமீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியனூர், விழுப்புரம் மாவட்டம் நொளம்பை, தருமபுரி மாவட்டம் பிக்கிலியில் தலா 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.