தமிழ் முஸ்லிம் மக்களை மகிழ்விப்பதற்காக அரசாங்கம் சிங்கள மக்களுக்கு எதிராக செயற்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ள கருத்து முற்றிலும் தவறானது. இந்த வெறுப்பு பேச்சு குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாடு என்ன, அரசியல் இலாபத்துக்காக ராஜபக்ஷர்களின் இனவாத கொள்கையை எதிர்க்கட்சி பின்பற்ற கூடாது என  தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தெரிவித்தார்.

தமிழ் பேசும் மக்களை மகிழ்விப்பதற்காக அரசாங்கம் சிங்கள மக்களுக்கு எதிராக செயற்படுகிறது. அதன் ஒரு செயற்பாடாகவே ஞானசார தேரரின் காவியுடை களைக்கப்பட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின்  சிரேஷ்ட உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, மல்வத்து மகாநாயக்க தேரரிடம் குறிப்பிட்ட விடயம் குறித்து கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஞானசார தேரரின் காவியுடை நீக்கப்பட்டதை எதிர்க்கட்சியினர் இனவாத கோணத்துக்கு கொண்டு சென்றுள்ளார்கள். நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காகவே அவருக்கு நீதிமன்றம் கடூழிய சிறைதண்டனை விதித்துள்ளது. காவியுடை தொடர்பில் எழுந்த பிரச்சினைக்கு சிறந்த தீர்வு தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

காவியுடை முன்னிலைப்படுத்தி கண்டியில் இருந்து பேரணியாக வந்தவர்கள் தற்போது ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்களின் உண்மை நோக்கம் என்னவென்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.இந்த விடயத்தில் ஜனாதிபதி சிறந்த தீர்மானத்தை எடுப்பார்.

ராஜபக்ஷர்களின் இனவாத கொள்கையை ஐக்கிய மக்கள் சக்தி தற்போது கையில் எடுத்துள்ளது. தமிழ் பேசும் மக்களை மகிழ்விப்பதற்காக அரசாங்கம் சிங்கள மக்களுக்கு எதிராக செயற்படுகிறது. அதன் ஒரு செயற்பாடாகவே ஞானசார தேரரின் காவியுடை களைக்கப்பட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின்  சிரேஷ்ட உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, மல்வத்து மகாநாயக்க தேரரிடம் குறிப்பிட்ட விடயம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஞானசார தேரர் விவகாரத்தில் தமிழ் மக்களை தொடர்புப்படுத்தி, சிங்கள மக்கள் மத்தியில் இன நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த கருத்து அமைந்துள்ளது.எதிர்க்கட்சியில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் இந்த விடயத்தை கண்டும் காணாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரியது.

இனவாத கருத்துக்களை சமூகமயப்படுத்துவதை ஐக்கிய மக்கள் சக்தி தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தத்துக்கு அச்சுறுத்தல், புலிகள் மீளுருவாக்கம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அரசியல் செய்வது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கொள்கையாகும். அந்த கொள்கையை கையில் எடுக்க வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியிடம் குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.