போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தனது ஐரோப்பிய பயணத்தின் அங்கமாக நோர்வேக்கு இன்று சனிக்கிழமை (17) விஜயம் மேற்கொண்டு நோர்வே வாழ் இலங்கை மக்களுடனான சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
நோர்வே நேரப்படி, மாலை ஐந்து மணிமுதல் இரவு எட்டுமணி முதல் இந்தச் சந்திப்பு ஒஸ்லோவில் குறித்த சந்திப்பு நடைபெற்றிருந்தது. இந்தச் சந்திப்பில் புலம்பெயர்ந்த சிங்கள, தமிழ் மக்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் சில தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் குறித்த சந்திப்பினை புறக்கணித்ததோடு அமைச்சர் பிமல் ரத்நாயக்க பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கேள்விகளை எழுப்பியுள்ளன.
அவ்வமைப்புக்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் பூர்வீக நிலங்கள் நிபந்தனையின்றி எப்போது முழுமையாக விடுவிக்கப்படும்?
தமிழர் தாயகத்தில் அரச ஆதரவுடன் தொடரும் திட்டமிட்ட புத்தமயமாக்கல், விகாரை அமைப்புகள் மற்றும் தொல்லியல் திணைக்கள ஆக்கிரமிப்புகள் எப்போது நிறுத்தப்படும்?
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் வெளிப்படையான விசாரணை எங்கே?
செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் சர்வதேசக் கண்காணிப்புடனும் தடயவியல் நிபுணத்துவத்துடனும் எப்போது தோண்டப்பட்டு சுயாதீன விசாரணை நடத்தப்படும்?
யுத்தக் குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இன அழிப்புக்கான பொறுப்புக்கூறல் எப்போது உறுதி செய்யப்படும்?
வடக்கு-கிழக்கு தாயகப் பகுதிகளில் தொடரும் தீவிர இராணுவமயமாக்கல் எப்போது முழுமையாக விலக்கிக்கொள்ளப்படும்?
தமிழர் நிலம், கடல் வளம் மற்றும் இயற்கை வளங்களின் மீதான அபகரிப்பு எப்போது நிறுத்தப்படும்?
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டுத் தலங்கள், வரலாற்றுத் தொல்லியல் தளங்கள் மற்றும் நினைவேந்தல் உரிமைகள் சட்டபூர்வமாகப் பாதுகாக்கப்படுமா?
தமிழர்களை அச்சுறுத்தும் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அடக்குமுறைச் சட்டங்கள் எப்போது முழுமையாக நீக்கப்படும்?
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் அரசியல் தீர்வுக்கான அரசின் உத்தியோகபூர்வ வரைபு எங்கே? ஆகிய கேள்விகள் எழுப்பபட்டள்ளன.
அத்துடன் குறித்த கேள்விகளுக்கு உரிய தீர்வில்லாமல் முன்னைடுக்கப்படும் அரசாங்கத்தின் சந்திப்புக்கள் மீண்டும் தமிழரை ஏமாற்றி 'நாம் சிறிலங்கர்' என்ற முழக்கத்தின் கீழ் தமிழ்த்தேசியத்தின் இருப்பை அழிப்பதாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.