சிறுவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டமூலம் ஒன்றை கிரீஸ் பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை (23) அங்கீகரித்துள்ளது.
இந்தத் தடை சட்டம் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் முழுமையாக அமுலுக்கு வருகிறது.
பயனர்களின் வயதைச் சரிபார்க்கவும், அவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கவும் முறையான வழியொன்றைக் கண்டறிய சமூக ஊடக தளங்களுக்கு இரண்டரை மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சொதாக்கிஸ் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஆணையத்துடன் இணைந்து வயதுச் சரிபார்ப்பு தீர்வைக் கோரும் ஏழு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் கிரீஸும் ஒன்றாகும்.
கடந்த ஆண்டு சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த சட்டம் இயற்றிய முதல் நாடாக அவுஸ்திரேலியா விளங்கியது. பிரான்ஸில் நிறைவேற்றப்பட்ட சட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் அந்நாட்டின் அரசியலமைப்புப் பேரவையால் இரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களின் தூக்கம், கவனம் மற்றும் நண்பர்களுடன் செலவிடும் நேரத்தைக் கெடுக்கும் "முடிவற்ற ஸ்கிரோலிங்" பழக்கத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்கப் பெற்றோருக்குத் துணையாக நிற்பதாகக் கிரீஸ் தெரிவித்துள்ளது.