இதுவரை ஆடு, மாடு முதலான கால்நடைகளை மட்டுமே தாக்கி வந்த வைரஸ் ஒன்றினால் முதல் முறையாக மனிதர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். பிரான்ஸில் ஷமோண்டா வகை வைரஸ் (Shamonda virus) கண்டறியப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லியான் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீவிர உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நோயாளி பரிசோதிக்கப்பட்டபோது, அவர் ஷமோண்டா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதிசெய்யப்பட்டது.
குறித்த நபர் நோய் எதிர்ப்புச் சக்தியும் குறைவாக இருந்த நிலையிலேயே அவருக்கு இந்த மரணம் நேர்ந்துள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒர்த்தோபுன்யா (orthobunya) வகையைச் சேர்ந்த ஷமோண்டா வைரஸ் மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் 1960களில் முதல் முறையாக கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் கொசு போன்ற மிகச் சிறிய பூச்சியினங்கள் கடிப்பதன் ஊடாக மாடுகள், ஆடுகள், குதிரைகள் போன்ற விலங்குகளுக்கு பரவக்கூடியது. இந்த வைரஸால் தாக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்படுவதோடு, விலங்குகளின் பால் சுரக்கும் தன்மையும் இதனால் குறைவடையும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இத்தகைய வைரஸினால் தாக்கப்பட்ட நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் பிரான்ஸ் சுகாதார அமைச்சு தெரிவிக்கையில்,
“உயிரிழந்த நோயாளிக்கு பூச்சி கடித்ததன் மூலம் இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கக்கூடும். இது கடுமையான நோய்ப் பாதிப்பு உள்ள ஒருவருக்கு மட்டுமே ஏற்படக்கூடிய விதிவிலக்கான சம்பவமாக கருதலாம். இதனால் பொதுமக்களுக்கு நேரடி ஆபத்தோ பெருந்தொற்று அச்சுறுத்தலோ இதுவரை கண்டறியப்படவில்லை. எனவே, பொதுமக்கள் இந்த வைரஸ் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்று குறிப்பிட்டுள்ளது.