கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலுள்ள மலசல கூடங்கள் மிக மோசமான மற்றும் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
குறித்த வைத்தியசாலையின் சுகாதாரச் சீர்கேடுகள் தொடர்பாகப் பத்திரிகையில் வெளியான செய்தியினை அடிப்படையாகக் கொண்டு, மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்விடயத்தைத் தனது சொந்தப் பிரேரணையாக (Suo Motu) எடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகள் மற்றும் ஏனைய பொதுப் பகுதிகளில் அமைந்துள்ள மலசல கூடங்கள் உரிய பராமரிப்பின்றி, துர்நாற்றம் வீசும் நிலையிலும் அருவருக்கத்தக்க வகையிலும் காணப்படுவதாக அச்செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதனால் சிகிச்சைகளுக்காக வருகை தரும் நோயாளர்கள் அவற்றைப் பயன்படுத்துவதற்குப் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதுடன், வேறு வழியின்றிப் பயன்படுத்துவதால் புதிய தொற்று நோய்களுக்கு உள்ளாகும் ஆபத்தான நிலையும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் 27ஆம் திகதிக்கு முன்னதாக விரிவான விளக்க அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயம் கோரிக்கை விடுத்துள்ளது.