ரஷ்யாவில் வைத்து கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர் என அறியப்படும் ‘ரொட்டும்ப அமில’ எனும் அமில சம்பத் சேபால ரத்நாயக்க, நாளை வியாழக்கிழமை (20) நாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளார்.

இதற்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய   விசேட குழுவொன்று ஏற்கனவே ரஷ்யாவுக்குப் பயணமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரொட்டும்ப அமில  தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு இடம்பெற்ற பல்வேறு மனிதப் படுகொலைகள், கப்பம்  கோருதல் மற்றும் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய  தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபராவார். 

சட்ட நடவடிக்கைகளை புறக்கனித்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த இவர், சர்வதேச பொலிஸாரால் விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கைக்கு அமைய, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த வருடம் மார்ச் மாத இறுதியில் ரொட்டும்ப அமிலவின் கைது குறித்து ரஷ்யப் பொலிஸாரால் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதையடுத்து, நாடுகடத்தல் சட்டத்தின்  கீழ் அவரை இலங்கைக்கு கொண்டு  வருவதற்கான நடவடிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டன.

இதனிடையே, தன்னை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிராக ரஷ்ய நீதிமன்றத்தில் அவர் மேன்முறையீடு செய்திருந்ததால், அவரை நாட்டுக்கு அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.

மேலும், தன்னை இலங்கைக்கு ஒப்படைப்பதைத் தவிர்க்கும் சூட்சுமத் திட்டமாக, ரஷ்ய இராணுவ சேவையில் இணைவதன் ஊடாக அந்நாட்டுப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவர் உரிய தரப்பினரிடம் விண்ணப்பித்திருந்தமையும் இலங்கைப் புலனாய்வுத் தகவல்கள் மற்றும் பொலிஸ் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், அவரை இன்று நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை - ரொட்டும்ப பகுதியைச் சேர்ந்த அமில சம்பத் சேபால ரத்நாயக்கவிற்கு எதிராக, 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி ஊருபொக்க பகுதியில்  வர்த்தகர் ஒருவரைச் சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட பல வழக்குகள்  நிலுவையில் உள்ளன.

2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 7 ஆம் திகதி டுபாய்க்குத் தப்பிச் சென்றிருந்த இவர், 2019 ஆம் ஆண்டு டுபாயில் நடைபெற்ற பாதாள குழு தலைவர் என அறியப்பட்ட  மாகந்துர மதுஷின் களியாட்ட நிகழ்வின் போது  ஐக்கிய அரபு அமீரகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, கஞ்சிப்பானை இம்ரானுடன் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தார்.

பின்னர் மாத்தறை குற்றத்தடுப்புப் பிரிவினரால்  தடுத்து வைத்து விசாரணைக்க உட்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.