இலங்கையில் வருடாந்தம் பதிவாகும் குழந்தை பிறப்புகளில் சுமார் 10 சதவீதமானவை குறைமாதப் பிறப்புகளாகப் பதிவாகியுள்ள நிலையில், முழுமையான கர்ப்பகாலம் முழுமைபெறுவதுக்கு முன்னரே பிறக்கும் இத்தகைய குழந்தைகளுக்குத் தொடர்ச்சியான மருத்துவச் சிகிச்சைகளும் பிரசவத்துக்குப் பின்னர் தொடர் கண்காணிப்பு சேவைகளும் வழங்கப்படுவது அவசியம் என இலங்கை மகப்பேற்றியல் மற்றும் பெண்ணோயியல் நிபுணர்கள் சங்கத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 15 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட 'உலக குறைமாதக் குழந்தைகள் தினத்தை' முன்னிட்டு, இலங்கை மகப்பேற்றியல் மற்றும் பெண்ணோயியல் நிபுணர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட விழிப்புணர்வு நிகழ்வின் போதே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மருத்துவத்துறையின் வளர்ச்சியினால் குறைமாதக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் திறன் கணிசமாக அதிகரித்துள்ள போதிலும், அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்வதற்கு உயிர் பிழைப்பது மாத்திரம் போதுமானதல்ல என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பார்வைக் குறைபாடு மற்றும் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் விருத்தியைப் பாதிக்கும் வகையிலான சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
பிரசவ வார்ட்டுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும் இவ்வாறான உடல்நலச் சிக்கல்கள் தோன்ற வாய்ப்புள்ளது. எனவே, அவ்வாறான உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சைகளையும் ஆதரவையும் வழங்குவதற்குத் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பும் உடல் வளர்ச்சி குறித்த மதிப்பீடுகளும் அத்தியாவசியமானவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, குறைமாதக் குழந்தையொன்றின் உயிரைக் காப்பாற்றுவதுடன் சுகாதாரச் சேவைக் கட்டமைப்பின் பொறுப்பு முடிவடைந்துவிடக் கூடாது. அக்குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் விருத்தியை உறுதிப்படுத்தும் வகையில், தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலிருந்து வெளியேறும் குழந்தைகளுக்கு முறையான தொடர்ச்சியான கண்கானிப்பும் பராமரிப்புச் சேவைகளும் கிடைக்கப்பெற வேண்டும் . மேலும், குறைமாதக் குழந்தைகளுக்கான பராமரிப்புச் சேவைகளை மேம்படுத்துவதற்கு அரச சுகாதாரச் சேவைக் கட்டமைப்பு, தொழில்சார் சங்கங்கள், தனியார் துறை மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கு இடையில் வலுவான ஒத்துழைப்பு அவசியம் எனவும் பிரதி அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
இதேவேளை, குறைமாதக் குழந்தைகளின் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் அவர்களின் எதிர்கால சுகாதார நிலைமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விசேட வழிகாட்டல் கோவையொன்றும் இந்நிகழ்வின் போது உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.