அநுராதபுர போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு, மேல் நீதிமன்றத்தினால் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்த சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய், குறித்த குற்றத்ததை போன்றதொரு வழக்கில் கெக்கிராவ நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபருக்கு, அநுராதபுர மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த பிணை உத்தரவை இரத்து செய்யுமாறு வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இந்திக அட்டநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவ தொடர்பான வழக்கு நேற்று (17) புதன்கிழமை அநுராதபுர மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரச தரப்பு சார்பில் மன்றில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி ஹிமாலி ஜயநெத்தி விடயங்களை முன்வைக்கையில், குறித்த பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயகத்துக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் மேல் நீதிமன்றத்தினால் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்த போது, பிரதிவாதி குறித்த குற்றச்செயலை போன்றதொரு குற்றமொன்றைப் புரிந்த குற்றச்சாட்டில் கல்னேவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, கெக்கிராவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கமைய, பிரதிவாதி மேல் நீதிமன்றத்தினால் முன்னர் விதிக்கப்பட்ட பிணை நிபந்தனைகளை மீறியுள்ளார். ஆகையால் இதனை கருத்திற்கொண்டு பிரதிவாதிக்கு இந்த வழக்கில் வழங்கப்பட்ட பிணை உத்தரவை இரத்து செய்து, வழக்கு விசாரணை நிறைவுபெறும் வரை அவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
பிரதிவாதி சார்பில் ஆஜராகி விடயங்களை முன்வைத்த சட்டத்தரணி சுருங்க மொஹொட்டி, பிரதிவாதிக்கு பிணை வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நீதிமன்றம் மிகவும் நியாயமான முறையில் அவதானம் செலுத்தி பிணை வழங்கியதாகக் குறிப்பிட்டார்.
எனினும், பிரதிவாதி சார்பில் ஆஜராவதில் தனக்கு சில எல்லைகள் உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், பிரதிவாதி மற்றுமொரு வழக்கு தொடர்பாக கெக்கிராவ நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆகையால் பிரதிவாதியின் பிணையை இரத்து செய்வதா இல்லையா என்பது தொடர்பில் நீதிமன்றம் பொருத்தமான உத்தரவொன்றை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
பிரதிவாதிக்கு வழங்கப்பட்டிருந்த பிணையை இரத்து செய்ய மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வழக்கின் 4 ஆவது சாட்சியாளராகப் பெயரிடப்பட்டிருந்த, பாதிக்கப்பட்ட பெண் வைத்தியருடன் சேவையாற்றிய அநுராதபுர போதனா வைத்தியசாலையின் சிசு நல விசேட வைத்தியர் மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆகியோர், அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஹிமாலி ஜயநெத்தியின் நெறிப்படுத்தலின் கீழ் சாட்சியமளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையிடமிருந்து சாட்சியங்களைப் பதிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரின் தந்தை,“ தனது மகள் இதற்கு முன்னர் சேவையாற்றிய திருகோணமலை மற்றும் குளியாப்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளில் அவருக்கு உரிய பாதுகாப்பு இருந்தது. வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தனது மகளை பாதுகாத்ததாகவும், எனினும் இந்த சம்பவத்தின் போது மகளைப் பாதுகாத்துக்கொள்ளத் தம்மால் முடியாமல் போய்விட்டதாகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்கக் கூறிய பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரின் தந்தை, தனது மகள் தங்கியிருந்த அநுராதபுர போதனா வைத்தியசாலையின் தங்குமிடத்தில் அவருக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் தாம் வந்து பார்த்தபோது மாத்திரம், வைத்தியசாலைத் தங்குமிடத்தைச் சுற்றியிருந்த மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு, மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வைத்தியசாலைத் தங்குமிடம் சுற்றிலும் வெளிச்சமாக்கப்பட்டிருந்தது.
வைத்தியசாலைத் தங்குமிடங்கள் மற்றும் அங்கு தங்கியிருக்கும் வைத்தியர்களின் பாதுகாப்புத் தொடர்பாக அநுராதபுர போதனா வைத்தியசாலை நிர்வாகம் எந்தவிதமான அக்கறையும் செலுத்தவில்லை. இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் தனது குடும்பத்துடன் வெளிநாடுகளுக்குச் செல்லும் திட்டம் இருந்ததாகவும் தெரிவித்த பெண் வைத்தியரின் தந்தை, எனினும் இலங்கையிலேயே வாழ்ந்து இந்நாட்டு மக்களுக்குச் சேவை செய்வதாக மகள் தீர்மானித்ததால் நாட்டில் தங்கியிருக்கத் தீர்மானித்ததாகக் கூறினார்.
இந்த வழக்கின் மேலதிக விசாரணையை இந்த மாதம் 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்த மேல் நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வழக்கின் 39 ஆவது சாட்சியாளராகப் பெயரிடப்பட்டுள்ள அநுராதபுர போதனா வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி சம்பத் சேனதுங்கவுக்கு உத்தரவிட்டார்.