கென்யாவில் இரண்டாவது எபோலா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

39 வயதுடைய குறித்த நோயாளி, கொங்கோ ஜனநாயகக் குடியரசில் இருந்து கென்யாவுக்குப் பயணம் செய்து எபோலா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முதலாவது நோயாளியான வர்த்தகரின் நெருங்கிய உறவினர் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நோய்த்தொற்று ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர் குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும், வைரஸ் மற்றவர்களுக்குப் பரவும் அபாயம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், “இரு வழக்குகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதால், பரந்த சமூகத்தில் வைரஸ் பரவியதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை” எனத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு, பொதுமக்கள் அமைதியாகவும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

கென்யா தொடர்ந்து திறந்த நிலையில் இருப்பதாகவும், பயணம், வர்த்தகம் அல்லது பொதுக் கூட்டங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நோயாளி அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், எல்லைப் பகுதிகளில் சுகாதாரப் பரிசோதனைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.