அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை (13) ரொக்கெட் விண்ணில் பாய்ந்தபோது வானில் 'ஸ்பேஸ் ஜெல்லி மீன் ' (Space Jellyfish) என்ற ஒளிரும் மேகக் காட்சி தோன்றி அனைவரையும் வியக்கவும் சற்று அச்சப்படவும் வைத்துள்ளது.
இந்த வியக்கவைக்கும் ஜெல்லி மீன் போன்ற ஒளிரும் காட்சி புளோரிடா மட்டுமின்றி, அமெரிக்காவின் கிழக்குக் கரைப் பகுதி முழுவதும் பல மாநிலங்களில் தெளிவாகத் தெரிந்துள்ளது.
நாசாவின் 35-வது வணிக விநியோக சேவைகள் (CRS) திட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) டிராகன் விண்கலம் மூலம் அதிகமான அறிவியல் ஆய்வுக் கருவிகளை காலை 6:33 மணிக்கு (கிழக்கு பகலொளி நேரம் - EDT) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதிகாலையில் சூரிய உதயத்திற்கு சற்று முன்பு ராக்கெட் விண்ணில் பாயும் போது, அதன் வெளியேற்றும் வாயுக்கள் (exhaust plume) உயரமான வளிமண்டலத்தில் சூரிய ஒளியைப் பிரதிபலித்து ஒளிர்கின்றன இக்காட்சி ஜெல்லி மீன் போல காட்சியளித்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.
நாசா மற்றும் பல்வேறு ஊடகங்கள் இதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றன.