நேபாள- திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்துக்குப் பின்னர் ஏராளமானோர் காணாமற் போயிருந்தனர். இதன்போது கைலாச யாத்திரைக்காகச் சென்றிருந்த அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வசித்து வந்த ஈழத் தமிழரான சந்திரசேகரன் முரளிதரன் ( வயது- 47), அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் (வயது-42) மற்றும் அவர்களின் மகன்களான அஷ்வின் (வயது-14), ஆருஷ் (வயது-11) ஆகிய நால்வர் காணாமல் போயிருந்தனர்.
அவர்கள் காணாமல் போய் இன்றுடன் 45 நாட்கள் ஆகின்றன. கைலாச யாத்திரை சென்றவர்கள் சிவனுடனேயே ஒன்றி விட்டனர் என எண்ணிக் கொண்டு இன்று சனிக்கிழமை (10.10.2026) அவர்களின் ஆன்ம ஈடேற்றத்துக்கான விசேட பிரார்த்தனைகள் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. இதற்கமைய, அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள சிறீ வெங்கடேஸ்வரர் ஆலயத்திலும், கோப்பாய் பிராம்பற்றை இலுப்பையடிப் பிள்ளையார் கோவிலிலும் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்றன.
கிளிநொச்சி விசேட தேவையுடையோர் வலை அமைப்பின் மலையாளபுரம் இல்லத்தின் இன்றைய செலவு காணாமல் போனவர்களின் உறவுகளால் ஏற்றுக் கொள்ளப்படுவதுடன் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர். கலாநிதி. ஆறு.திருமுருகனின் சிவபூமி அறக்கட்டளையால் நடாத்தப்படும் கீரிமலை வயோதிபர் இல்லத்தில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு விசேட மதிய உணவும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இறந்த அனைவரினதும் ஆத்ம ஈடேற்றத்திற்கான புரட்டாதி அமாவாசை மகாளயக் கடனும் நிறைவேற்றப்பட்டுள்ளது.