சங்குப்பிட்டி பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக நாளை புதன்கிழமை (07.10.2026) முதல் 12ஆம் திகதி வரை (12.10.2026) வரை பாலம் முழுமையாக மூடப்படவுள்ள நிலையில், நாளை காலை 9 மணி வரை மாத்திரம் பேருந்து சேவைகள் வழமைபோன்று பாலத்தின் ஊடாக இடம்பெறும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்..

அதன் பின்னர் மாற்று வழித்தடத்தின் ஊடாக பேருந்து சேவைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்குப்பிட்டி பாலம் மூடப்படும் காலப்பகுதியில் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, பேருந்து சேவைகள் தடையின்றி இடம்பெறுவதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் இருந்து பூநகரி நோக்கி வரும் பேருந்துகள், பூநகரியிலிருந்து பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் செல்லும் மாற்று வழித்தடத்தைப் பயன்படுத்தி, அதே வழித்தடத்தின் ஊடாக மீண்டும் பேருந்து சேவைகளை முன்னெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று வழித்தடத்தைப் பயன்படுத்துவதன் காரணமாக பேருந்துகளின் பயணத் தூரம் சுமார் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சேவை வழங்குநர்கள் சேவை நோக்குடன் மாற்று வழித்தடத்தில் பேருந்து சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க இணங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், அதிகரிக்கும் பயணத் தூரத்தை கருத்திற்கொண்டு, சிறிய அளவிலான பேருந்துக் கட்டண உயர்வு ஏற்படக்கூடும் எனவும், இதனை பயணிகள் கருத்திற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனவே, நாளை முதல் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சங்குப்பிட்டி பாலத்தைப் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளும் பயணிகள் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, மாற்று வழித்தடம் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், பேருந்து சேவைகள் சீராக இடம்பெறுவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியலாளர் சூ.விமலேஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.