அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கக் கூடிய ஆரோக்கிய நிலையில் உள்ளதாகக் கொழும்பு கோட்டை நீதிவான் பசன் அமரசேனவிடம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 10 பேர் கொண்ட விசேட வைத்தியர்கள் குழு அறிவித்துள்ளது.

வைத்தியக் குழுவின் இந்த தீர்மானத்தைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் எடுத்துக்கொள்ளப்படுவார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றிற்குத் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ் சலேயின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்த 10 நிபுணத்துவ வைத்தியர்கள் அடங்கிய மருத்துவக் குழு, அவர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளதாக நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

வைத்திய அறிக்கையை அடுத்து, அவரை மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் தடுப்புக் காவலில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதாக சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் உறுதிப்படுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்புப் தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணைகள் தொடர்பிலேயே ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.