சவூதி அரேபியாவின் புனித நகரான மக்காவில் பங்களாதேஷ் நாட்டுப் பிரஜைகள் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், தமது நாட்டுக் குடிமக்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னரே தங்களுக்குத் தெரியவந்ததாக பங்களாதேஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் பள்ளிவாசலுக்குள் "அநாகரிகமான செயலில்" ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை (14) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவூதி அரேபியா அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 

இச்சம்பவம் குறித்த வழக்கு தொடர்பான முழுமையான விபரங்களைக் கேட்டு, சவூதி அரேபிய அரசைத் தொடர்புகொண்டுள்ளதாக பங்களாதேஷ் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

இரு இஸ்லாமிய நாடுகளும் தங்களது சமய ரீதியான நெருக்கம் மற்றும் வலுவான பொருளாதார உறவுகள் காரணமாக நெருக்கமான பிணைப்பைக் கொண்டுள்ளன. இந்நிலையில், இந்த இரட்டை மரண தண்டனை நிறைவேற்றம் பங்களாதேஷில் பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சவூதி உள்நாட்டலுவல்கள் அமைச்சு கூறுகையில், இந்த பங்களாதேஷ் பிரஜைகள் இருவரும் "தஸீர்" (Tazir) சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சட்டத்தில் "தஸீர்" என்பது நீதிபதியின் விருப்பத்திற்கு/அதிகாரத்திற்கு உட்பட்டு வழங்கப்படும் தண்டனையைக் குறிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், அவர்கள் செய்த குற்றத்தின் தீவிரத்தன்மை மற்றும் பள்ளிவாசலின் "புனிதத்தை" அவர்கள் மீறியதன் காரணமாகவே இந்தத் தண்டனை வழங்கப்பட்டதாக அந்நாட்டு அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இருவர் தொடர்பான குற்றங்கள் மற்றும் இந்த வழக்கின் சட்ட நடவடிக்கைகள் குறித்து சவூதி அரசிடம் தொடர்புகொண்டு தாம் கேட்டுள்ளதாக பங்களாதேஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷாமா ஒபைத் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

சவூதி அதிகாரிகளிடமிருந்து தகவல் கிடைத்த பிறகு, தண்டனை நிறைவேற்றப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்களை பங்களாதேஷுக்கு கொண்டுசெல்வது முதலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பங்களாதேஷ் அரசு பரிசீலிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள பங்களாதேஷ் குடிமக்களின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு உறுதியுடன் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.