ஜப்பான் செவ்வாய் கிரகத்தின் துணைக்கோள்களான போபோஸ் (Phobos) மற்றும் டீமோஸ் (Deimos) ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கான ஜப்பானின் வரலாற்றுச் சிறப்புமிக்க செவ்வாய் நிலவுகள் ஆய்வு (MMX) விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

ஜப்பானின் தனேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து H3 ராக்கெட் மூலம் இன்று செவ்வாய்க்கிழமை  (20)  அதிகாலை ஏவப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தின் போபோஸ் நிலவில் தரையிறங்கி, அங்கிருந்து மாதிரிகளைச் சேகரித்து மீண்டும் பூமிக்குக் கொண்டு வருவதே இதன் முதன்மை இலக்காகும்.

இந்த ஆய்வு மூலம் செவ்வாயின் நிலவுகள் எப்படி உருவாயின என்பதையும், ஆரம்பகால சூரிய குடும்பத்தின் இரகசியங்களையும் அறிய முடியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பயணத் திட்டத்தின்படி, நிலவிலிருந்து மாதிரிகளை எடுத்து வரும் உலகின் முதல் விண்கலமாக செவ்வாய் நிலவுகள் ஆய்வு வரலாற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணில் ஏவப்பட்ட சுமார் 71 நிமிடங்களில், விண்கலம் ராக்கெட்டிலிருந்து வெற்றிகரமாகப் பிரிந்து செவ்வாய் கிரகத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியுள்ளதாசுவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை எந்த நாடும் போபோஸ்' நிலவில்  தரை இறங்கியதில்லை. அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் கூட செவ்வாயில் தரை இறங்கியுள்ளனவே தவிர, அங்கிருந்து மாதிரிகளை எடுத்து வந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்தச் சாதனையை முறியடிக்க, ஜப்பான் விண்வெளி மையம், நாசா உள்ளிட்ட உலக விண்வெளி நிறுவனங்களுடன் கைகோர்த்து 'எம்.எம்.எக்ஸ்,' என்ற விண்கலத்தினை ஏவியுள்ளது எனலாம்.

ஐந்து தொன் எடைகொண்ட இந்த விண்கலம் 2027ம் ஆண்டின் பிற்பகுதியில் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையை சென்றடையும் எனவும்  போபோஸ் நிலவின் மேற்பரப்பில் பிரான்ஸ் - ஜெர்மனி இணைந்து உருவாக்கிய 'இடேபிக்ஸ்' என்ற சிறிய ரோவரை தரை இறக்கி ஆய்வு செய்யும் என்றும்  நிலவின் மேற்பரப்பில் இருந்து குறைந்தது 10 கிராம் அளவிலான தூசு மற்றும் பாறை துகள்களை சேகரித்துக் கொண்டு 2031ம் ஆண்டு பூமிக்கு திரும்பும் எனவும்  விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதன் வாயிலாக  செவ்வாய்க் கிரகத்தின் நிலவுகள் எவ்வாறு தோன்றின மற்றும் சூரிய குடும்பத்தின் ஆரம்பகால பரிணாம வளர்ச்சி போன்ற பல மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.