தெற்காசிய பிராந்தியத்தில் உருவெடுத்து வரும் கடல்சார் பாதுகாப்பு சவால்கள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராயும் நோக்கில், கொரியா - சிறிலங்கா - அவுஸ்திரேலியா - பிரான்ஸ் கடல்சார் பாதுகாப்பு மாநாடு இன்று திங்கட்கிழமை (16) கொழும்பில் நடைபெற்றது.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தலைமையில், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பிராந்திய கடல்சார் கற்றல் மையத்தில் இம்மாநாடு இடம்பெற்றது. கடல்சார் பாதுகாப்பு, சர்வதேச சட்டம், கடல்சார் தகராறுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவை குறித்து ஆக்கப்பூர்வமான கொள்கை ரீதியான உரையாடலை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
நிகழ்வின் தொடக்க உரையை ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எயர் வைஸ் மார்ஷல் டபிள்யூ. ஆர். டி. எம். ஐ. இந்திக விக்ரமசிங்க நிகழ்த்திய அதேவேளை, இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் கிம் யூன்-ஜங் (Kim Youn-Jung) மாநாட்டின் இலக்குகள் குறித்து விளக்கமளித்தார்.
இம்மாநாட்டில் கொரியா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் துறைசார் நிபுணர்களுடன், இலங்கையின் முப்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள், சுங்கத் திணைக்களம், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் மற்றும் கடலோரப் பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இதன் ஊடாகப் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற கடல்சார் பாதுகாப்பு சவால்களும், தெற்காசிய கடல் வழிகள் மற்றும் இணைப்புகளில் அவை ஏற்படுத்தும் தாக்கங்களும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. மேலும், சர்வதேச கடல்சார் சட்டத்தின் கீழ் தகராறுகளைத் தீர்ப்பது, நாடுகளுக்கு இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுதல், திறன் மேம்பாட்டை உறுதிசெய்தல் மற்றும் கடல்சார் துறை சார்ந்த விழிப்புணர்வை அதிகரித்தல் போன்ற முக்கிய விடயங்கள் குறித்தும் விரிவான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.