வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிக்கும் போது சிவப்பு, மஞ்சள் கொடிகளைக் கட்டும் போது பொலிஸாரால் கட்டுப்பாடுகள், எச்சரிக்கைகள் விடுக்கப்படுவதாகப் பலரும் எமக்குத் தொலைபேசி மூலம் அறியத் தந்துள்ளனர். சிவப்பு, மஞ்சள் கொடிகளைக் கட்டுவது சட்டவிரோதம் கிடையாது. அதனைப் பொலிஸார் தடுக்க முடியாது. எந்தச் சட்டத்தின் கீழும் வழக்குத் தாக்கல் செய்யவும் முடியாது. எனவே, சிவப்பு, மஞ்சள் நிறக் கொடிகள் வடக்கு- கிழக்கெங்கும் பறக்கட்டும் எனத் தமிழ்த்தேசிய  மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,     

சிவப்பு, மஞ்சள் கொடிகளைக் கட்டுவது தவறு, சட்டவிரோதம் என்றால் முதலில் இலங்கையின் தேசியக் கொடியில் காணப்படும் சிவப்பு, மஞ்சள் நிறங்களைப் பொலிஸார் அப்புறப்படுத்த வேண்டும். இலங்கையின் தேசியக் கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறங்களிருப்பது சரியென்றால் நாங்கள் சிவப்பு, மஞ்சள் நிறக் கொடிகள் கட்டி எங்கள் மாவீரர்களை அனுஷ்டிப்பதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் பொலிஸார் விதிக்க முடியாது. ஆகவே, தாராளமாகச் சிவப்பு, மஞ்சள் நிறக் கொடிகளைக் கட்டுங்கள். வடக்கு, கிழக்கு எங்கும் சிவப்பு, மஞ்சள் நிறக் கொடிகள் பறக்க வேண்டும்.    

அதனையும் தாண்டிச் சிவப்பு, மஞ்சள் கொடிகள் தொடர்பாகப் பொலிஸாரால் அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள் விதிக்கப்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்காக உதவத் தயாராகவுள்ளோம். 

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரத்தியேகமான இலச்சினைகள், புலிச் சின்னங்கள் போன்றவற்றைக் காட்சிப்படுத்துவதையும், விடுதலைப் புலிகள் தொடர்பான பாடல்கள் ஒலிக்க விடுவதையும் தவிர்க்க வேண்டும்.  தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடைகளுடன் மாவீரர்களின் உருவப் படங்கள் வைப்பதைத் தவிர்ப்பதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட பட்டங்களைப் பாவிப்பதையும் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.