முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி செலவீனத் தலைப்பின்கீழ் இரண்டு அரசாங்க நிறுவனங்களிலிருந்து சம்பளம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுடன் தொடர்புடைய வகையில், கடந்த ஜூன் மாதம் 18 ஆம் திகதியன்று மத்திய குற்றத் புலனாய்வுப் பிரிவினரால் சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்டுள்ள அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், கடந்த 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை இன்று (18) புதன்கிழமை வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், ஐந்து மாத கால விளக்கமறியல் சிறைவாசத்திற்குப் பின்னர் அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இரு அரசாங்க நிறுவனங்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் சம்பளம் பெறப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மத்திய குற்றத் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.