ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு எயார்பஸ் ரக விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை சம்பவம் தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராகக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை நிறைவு செய்வதற்கு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (18) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கிற்குரிய மூல அறிக்கை மற்றும் சான்றுப் பொருட்கள் ஏற்கனவே கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதவான் இதன்போது நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் ஏற்கனவே கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை நிறைவு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இச்சம்பவத்தின் முதலாவது சந்தேகநபரான கபில சந்திரசேன தற்போது உயிரிழந்துள்ளதாகவும், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கை இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குக் கிடைக்கப்பெறவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இவ்வழக்குடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களான பிரியங்கா நியோமாலி மற்றும் ஷமிந்திர ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் எதிராகத் தற்போது பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இச்சம்பவத்தின் நான்காவது சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைய, கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நாளை (19) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் மன்றுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதவான், எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராகக் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கை நிறைவு செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷ இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளால் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்ததுடன், இச்சம்பவம் தொடர்பாக முன்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.