'தமிழர்களின் நினைவுகளை அழிப்பதை நிறுத்து!"

தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் திருவுருவச்சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து சுவிசில் கண்டனப் போராட்டம்.

யாழ்.நல்லூர் பகுதியில் தமிழ் மக்களால் புனிதமாகப் பூசிக்கப்பட்ட தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் திருவுருவச்சிலை, சிறிலங்கா அரசின் காவல்துறையினரால் அடாவடித்தனமாக அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அத் திருவுருவச்சிலையை அதே இடத்தில் உடனடியாக மீள நிறுவக் கோரியும் 02.10.2026 வெள்ளி அன்று சுவிஸ் பேர்ண் பிரதான தொடருந்து நிலைய முன்றலில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

சிறிலங்கா அரசின் அடக்குமுறை அரசியலையும், தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை மறுக்கும் சிங்கள அதிகாரப் போக்கையும் கண்டித்து நடைபெற்ற இப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள,; அது தொடர்பான யேர்மன் மொழியிலான பதாதைகளைத்; தாங்கியவாறு தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

தமிழ் மக்களின் அடையாளங்களையும் நினைவுகூரும் உரிமைகளையும் திட்டமிட்டு அழிக்கும் சிறிலங்கா அரசுகளின் இனவாதப் போக்கையே இச்சம்பவம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

தமிழர் தாயகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் பௌத்த விகாரைகள் மீது எவ்வித நடவடிக்கையும்; எடுக்காத சிறிலங்கா காவல்;துறையினர், அகிம்சை வழியில் போராடி உயிர்நீத்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் திருவுருவச் சிலையினை அகற்றியிருப்பது, இலங்கையில் இருவேறு சட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றது என்பதனை வெளிக்காட்டியுள்ளது.

இந்தக் கண்டனப் போராட்டத்தின் ஊடாக, தமிழ் மக்களின் வரலாற்று நினைவுகளையும், நினைவேந்தல் உரிமையையும் பாதுகாப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. தமது வரலாற்றையும் தியாகங்களையும் நினைவுகூருவது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை என்றும், அந்த உரிமையைத் தடுக்கும் அல்லது அழிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
'நினைவுகளை அழிக்க முடியாது, நினைவேந்தல் உரிமையை மறுக்க முடியாது" என்ற உறுதியான செய்தியுடன தாயக மந்திரத்துடன் போராட்டம் நிறைவடைந்தது.