செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் ஆதாரங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படாத இயற்கை பேரிடர் கோட்பாடுகளை முன்வைப்பதைத் தவிர்க்கவேண்டும் என்றும், கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் காலக்கெடுவுடன்கூடிய சுயாதீன சர்வதேச தடயவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும் என்றும் பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
செம்மணி, சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் கடந்த திங்கட்கிழமை (19) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால சுருக்க அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ள பல விடயங்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் கடும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளன.
செம்மணி மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ள உடல்களின் உயர்வான எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், அவை தொற்றுநோயினாலோ அல்லது இயற்கை அனர்த்தத்தினாலோ உயிரிழந்தவர்களின் உடல்களாக இருக்கக்கூடுமோ எனும் கேள்வி எழுவதாகவும், மனிதப்புதைகுழியில் பெருமளவிலான ஆடைகள் கண்டறியப்படாமையைப் பொறுத்தமட்டில் அவை உக்கலடைந்திருப்பதற்கான சாத்தியப்பாடும் காணப்படுவதாகவும், இவற்றுடன் இணைந்ததாக மேலும் பல விடயங்களும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து பிரித்தானிய தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
யாழ்ப்பாணம், செம்மணியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழியில் இதுவரை 583 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் உள்ளடங்குகின்றன. மேலும் பாடசாலைப் புத்தகப்பைகள், பால் போத்தல்கள், பொம்மைகள் போன்ற பிற பொருட்களும் கண்றியப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில் செம்மணி மனிதப்புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்குச் சொந்தமானவையாகவும் இருக்கலாம் என பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்து தொடர்பில் நாம் மிகுந்த கவலையடைகிறோம்.
அவரது முதன்மை நிபுணத்துவம் குடியேற்றகால மற்றும் சூழலியல் தொல்லியல் துறை சார்ந்தது என்பதனால், மரபு ரீதியான தடயவியல் தொல்லியல் துறையில் சிறப்புப் பயிற்சி பெறாத ஒருவரின் இத்தகைய அனுமானங்கள் உண்மையை மூடிமறைக்கவும், குற்றச்செயல்களில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பவும் கூடும் என நாம் அஞ்சுகிறோம்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அண்மைய அறிக்கையில், ஆடைகளின்றி குழப்பமான முறையில் உடல்கள் புதைக்கப்பட்டிருப்பது இந்துக்களின் சமய ரீதியான சடங்குகளுக்கு முரணானது என்றும், எனவே இது இங்கு குற்றங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும் என்ற சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விவகாரம் தொடர்பில் உண்மைகளைக் கண்டறிந்து, குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச தடயவியல் நிபுணர்கள் மற்றும் மானுடவியலாளர்களின் பங்கேற்புடனான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
அத்தோடு தொல்லியல் நிபுணர்களின் அறிக்கையானது சர்வதேச சுயாதீன நிபுணர் குழுவொன்றின் மூலம் மீளாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.