கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகள், ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் சாதகமான பதில் கிடைக்காததைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேற மறுத்துள்ளனர்.சிறையில் உள்ள ஞானசார தேரரை விடுதலை செய்வது தொடர்பில் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிடும் வரை தமது போராட்டத்தைத் தொடரப் போவதாக பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க முன்னதாகக் கலந்துரையாடியுள்ளார்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு குறைந்தது ஒரு மாத காலம் தேவைப்படும் என ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தெரிவித்ததாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தப் பதிலில் அதிருப்தி வெளியிட்ட பிக்குகள், அரசாங்கத்திடமிருந்து சாதகமான அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என வலியுறுத்தியுள்ளனர்.

முன்னதாக, கடும் மழைக்கு மத்தியிலும் கொழும்பை வந்தடைந்த பிக்குகள், ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.