ஜோர்தானின் கராக் மாகாணத்தில்  உள்ள ஹ்மௌத் கிராமத்தில் அமைந்துள்ள கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  ஏழு பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

நேற்று வெள்ளிக்கிழமை (23) அன்று தேவாலயத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் காரில் வந்து இறங்கி கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில்  ஏழு பேர் உயிரிழந்தள்ளதுடன் மேலும் 34-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தின் போது தேவாலயத்திற்குள் சுமார் 150 முதல் 200 பேர் வரை இருந்ததாகக் கூறப்படுகிறது.

தாக்குதலுக்குப் பிறகு தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஜோர்தான் அரசாங்கம் இச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, இது தொடர்பாக விசாரணை விவரங்களை வெளியிடுவதற்கு அமான் பெருநகர வழக்கறிஞர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜோர்தானில் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் அரிதானவை என்றாலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் அமைதியைக் குலைக்கும் இந்தத் தாக்குதலுக்கு சர்வதேச அளவில் பரவலான கண்டனங்கள் எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன