பொதுபலசேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் (8) கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள ஞானசார தேரரின் விகாரையில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் கருத்துத் தெரிவித்த இந்துராகாரே தம்மரத்தன தேரர், சிறைச்சாலையில் ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்டது தொடர்பாக, தேரர்கள் மற்றும் பொதுமக்கள் பலருடன் ஜூம் (Zoom) தொழில்நுட்பம் வழியே தீர்க்கமான கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அவ்வாறு காவி உடையை அகற்றுவதனால் ஒருவரின் துறவறம் இல்லாமற்போய்விடாது என வலியுறுத்திய அவர், இலங்கை சந்திக்கவிருந்த பல்வேறு சவால்கள் குறித்து ஞானசார தேரர் தனது புத்தகத்தில் முன்கூட்டியே பதிவு செய்துள்ளார் எனவும் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் தற்போதைய சிக்கல்களுக்கு பலர் கட்சி அரசியலின் குறுகிய பார்வையில் இருந்து அனைத்தையும் அணுகுவதே பிரதான காரணம் எனச் சுட்டிக்காட்டிய தேரர், சமூக ஊடகங்களில் சிலர் "அடுத்து சிறை ஆடை அணிவிக்கப்படப்போவது இந்துராகாரே தம்மரத்தன தேரருக்கே" எனக் கூறி வருவதாகக் குறிப்பிட்டதுடன், ஞானசார தேரருக்கு ஆசி வேண்டி நாடு முழுவதிலும் போதி பூஜைகளை நடத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, இந்த ஊடகவியலாளர் சந்திப்பு எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராத, நடுநிலையான அமைப்பில் நடத்தப்படுவதாகவும், தாம் அனைத்து மதத்தினரின் உரிமைகளுக்காகவும் தோன்றுவதாகவும் தெரிவித்தார்.
ஹோமாகம நீதிமன்ற வழக்கு குறித்து தாம் பேசப்போவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், 2019ஆம் ஆண்டு ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த காலத்தில் ஞானசார தேரருக்கு அச்சுறுத்தல்கள் இருந்ததால் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார்.
ஆணைக்குழுவின் முடிவைக் காரணம் காட்டி அப்பாதுகாப்பை திடீரென விலக்கிக்கொள்ள முடியாது என வாதிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதியினால் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தவறானது என உயர்நீதிமன்றம் கூறவில்லை என்றும், அந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட நடைமுறை முறையற்றது என்றே தீர்ப்பளித்ததாகவும் தெளிவுபடுத்தினார்.
அத்துடன், கடந்த காலங்களிலும் தேரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டபோதிலும், நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படும் வேளைகளில் அவர்கள் காவி உடையுடனேயே அழைத்துவரப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.